வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனுடன் தகராறு செய்தாக, வால்பாறை வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அது அதிகார துஷ்பிரயோகம் என கண்டனம் தெரிவித்து வனத்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் உள்பட 3 பேர், அட்டக்கட்டி மலைப்பகுதியில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அங்கு பணியில் இருந்த வனத்துறை அதிகாரி விசாரித்ததாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிமீது வால்பாறை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு,  கோவை மாவட்ட (ஊரக) காவல்துறையினர் வியாழக்கிழமை வால்பாறை வனச்சரக அலுவலர் கே.ஜெயச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, வனத்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். நீதிபதி மகன் உள்பட 3 பேரிடம்  வனத்துறை அதிகாரி குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்வதாக கூறியுள்ளனர். எனினும், இது அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றம் சாட்டி வன ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரத்தில், நீதிபதியின் மகன் உள்பட அவரது நண்பர்கள் போதையில் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், வால்பாறை நீதித்துறை நீதிமன்ற தலைமை எழுத்தர் அளித்த புகாரில் வனத்துறை அதிகாரி குடிபோதையில் தகராறு செய்தாக கூறப்பட்டுள்ளதாம். அதன்  அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைத்தது.

விசாரணையில், வால்பறை பகுதியில் உள்ள  சிறுகுந்திராவில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு நீதிபதியின் மகன் உட்பட மூன்று பேருக்கு தங்குமிடம் வழங்கப்பட்டது. இரவு நேரத்திற்குள் வனத்துறை அதிகாரி அங்கு வந்து விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியே வந்த மூன்று விருந்தினர்களிடம் இரவில் யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கக்கூடும் என்பதால் விருந்தினர் மாளிகைக்குள் இருக்குமாறு அவர் மூவருக்கு அறிவுறுத்தினார்.

மூன்று விருந்தினர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர், அவர்களில் ஒருவர் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் என்று கூறியுதாகவும், அதன்பேரிலேயே வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்று வனத்துறை ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நீதிமன்ற ஊழியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து மூன்று விருந்தினர்களுக்கான தங்குமிடம் மிக குறுகிய அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“நீதித்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. நீதிபதி மகன் என்று மிரட்டல் விடுத்ததோடு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்வதா?” என்று அட்டக்கட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனப்பகுதிக்கு வரும் உயர்அதிகாரிகளின் பிள்ளைகள், விதிகளை மீறி செயல்படுவதாகவும், அதை தடுத்தால், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து தொல்லை செய்வதாகவும் வனத்துறை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில்,   ஆனைமலை புலிகள் காப்பக கிளை வனத்துறை அதிகாரிகள் சங்கம்,  வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாக தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக வால்பாறையில், காவல்துறைக்கும் வனத்துறைக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது.