சென்னை:

நாட்டிலேயே முதன்முறையாக  திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி உள்ளது தமிழக அரசு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, பணி ஆணை பெற்ற திருநங்கை செவிலியர் அன்பு ரூபி  அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.

திருநங்கை அன்புரூபி

தமிழக முதல்வர், சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார். அதன்படி திருநங்கை செவிலியர் அன்பு ரூபி உள்பட  5,224 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு செவிலியர் பணி வழங்கிய சாதனையை பெற்றுள்ளது தமிழகஅரசு.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பல்வேறு பணிகளுக்கு, மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி தேர்வு செய்தது. அவ்வாறு பல்வேறு பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  2,721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்பநர்கள் உள்ளிட்ட 5,224 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

இதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியர் பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டார்.

தனது பணி ஆணை கிடைக்கப்பட்டது குறித்து பேசிய அன்பு ரூபி, “நாட்டிலேயே திருநங்கை ஒருவா் அரசு செவிலியராகப் பணியமா்த்தப்படுவது இதுவே முதன்முறை. அரசு பணியாற்றுவது பெருமை அளிக்கிறது” குறிப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி – தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். இவரது உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக  திருநங்கையாக மாறிய அன்புராஜ், தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார்.  அன்புவை அவரது பெற்றோர் புறக்கணிக்காமல், அவர் செவிலியர் படிக்க உதவிய நிலையில், தற்போது அன்பு ரூபி, அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி பெற்றுள்ளார்.