வாழப்பாடியார்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அ.தி.மு.க. எம்.பி. முத்துகருப்பன் பல்டி அடித்துவிட்டார்.

“என்னிடம் பேசி என் மனதை முதல்வர் எடப்பாடி மாற்றிவிடுவார் என்பதற்காக, என் செல்போனை அணைத்து வைத்துள்ளேன்” என்று மீடியாவிடம் சொன்னவர், பிறகு, “எடப்பாடி கேட்டுக்கொண்டதால் ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை” என்று தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்” என்றார் அதே அதிமுகவைச் சேர்ந்த எம்.பி. நவநீதகிருஷ்ணன்.

“அதெல்லாம் வேண்டாம்.. பதவியை ராஜினாமா செய்யுங்கள் போதும்” என்று  சமூகவலைதளங்களில் எண்ணற்றோர் கூறியதற்கு பதில் இல்லை.

ஆனால், இதே காவிரி பிரச்சினைக்காக தனது அமைச்சர் பதவியையே துச்சமென மதித்து பதவி விலகியவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

காமராஜருடன் வாழப்பாடியார்..

அப்போது நரசிம்மராவ் பிரதமர். அவரது அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை  அமைச்சராக  வீற்றிருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. தமிழ்நாடு   காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார்.

அப்போதும் கர்நாடக அரசு தன்னி்ச்சையாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்பட்டது. மத்திய அரசும் நடுநிலை வகிக்காமல், கர்நாடகாவின் பக்கம் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது.

மத்திய அரசின் செயல்,  தமிழ்நாட்டுக்கு  எதிரான – நீதிக்குப் புறம்பான  செயல் என்று,  நரசிம்ம ராவுக்கு, கடிதம் எழுதினார் வாழப்பாடி ராமமூர்த்தி !

பத்து நாட்கள் ஆயிற்று..  பதில் இல்லை!

நண்பர்களைக்கூட  கலந்து ஆலோசிக்கவில்லை !

ஈராக் (முன்னாள்) அதிபர் சதாமுடன் வாழப்பாடியார்..

எவரிடமும் ஆலோசனை கேட்கவில்லை… தொழிலாளர் நலத் துறை  அமைச்சர் பதவியை  ஆரவாரம் இன்றி  ராஜினாமா செய்துவிட்டு,
டில்லியிலிருந்து தமிழகத்துக்கு பறந்து  வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி !

இன்றோ, ஒருவர், “தற்கொலை செய்துகொள்வேன்” என்கிறார், இன்னொருவர், “ராஜினாமா செய்வேன்” என்று சொல்லிவிட்டு பின்வாங்குகிறார்!

இவர்கள் மத்தியில் என்றும் உயர்ந்து நிற்கிறார் வாழப்பாடியார்!