டில்லி:

காவிரி பிரச்சினை தொடர்பாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த, அதிமுகவை சேர்ந்த முத்துக்கருப்பன் எம்.பி., தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதி யுமான வெங்கைநாயுடுவிடம் கொடுக்கவில்லை.

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.

அதன்படி ராஜினாமா கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசும்போது, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.

தனக்கு எம்.பி. பதவி, அம்மா கொடுத்த பதவி என்றும், மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும்   ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம்  தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்கள்  என்றாலும், இந்த விவகாரத்தில், நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும், முதல்வர் எடப்பாடி என்னை தொடர்புகொண்டு பேசச விரும்புவதாக தெரிவித்தார்கள். ஆனால், நான் யாரிடமும் பேச மாட்டேன் என்றும், தனது மொபைல் போனை ஆப் செய்து வைத்திருப்பதாகவும் கூறினார்.

எனது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள்  இருந்தாலும் மக்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறிவிட்டு, ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரிடம் கொடுக்கப்போவதாக அறிவித்து சென்றார்.

 இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து  சென்று சுமார் 2 மணி நேரமே ஆன நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரிடம்  கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ராஜினாமா செய்யாதது ஏன் என்பது குறித்து கருத்து தெரிவித்த முத்துக்கருப்பன் எம்.பி., முதல்வர் எடப்பாடி தன்னிடம் பேசியதால், தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறி உள்ளார்.

அதே நேரத்தில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் தம்பித்துரை, முத்துக்கருப்பன் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும், அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி.யான நவநீத கிருஷ்ணன், தற்கொலை செய்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையில், அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், ராஜினாமா செய்வதாக கூறி,  நாடகமாடியது கண்டிக்கத்தக்கது என்றும் சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.