புதுடெல்லி: கோடீஸ்வரர்கள் மீதான வரிவதிப்பு அதிகரிப்பால், நாட்டின் பிரபல பெரிய வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தனிப்பட்ட புரஃபஷனல்கள் என்ற தொழில் வகையில், வழக்கறிஞர்களின் எண்ணிக்கை கணிசமானது. சமீபத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த, கோடீஸ்வரர்களின் மீதான அதிக வரிவிதிப்பு இவர்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த அறிவிப்பின்படி, ஆண்டிற்கு ரூ.2 முதல் 5 கோடிகள் வரையான வருவாய் கொண்டவர்களுக்கு 39% வரியும், ஆண்டிற்கு ரூ.5 கோடிக்கும் மேலாக வருவாய் கொண்டவர்களுக்கு ரூ.42.7% வரியும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, பல ஓய்வுபெற்ற நீதிபதிகளும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது.

சில வழக்கறிஞர்கள் நாள் கணக்கின் அடிப்படையில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். சிலர் ஒரு வழக்கிற்கு இவ்வளவு என்று வாங்குகிறார்கள். இந்த வகையில், ராம்ஜெத்மலானி, சோலி சொராப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் கே.பராசரன் ஆகியோர் அடக்கம். மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியும் அடக்கம்.

அதேசமயம், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆவதற்கு சம்மதம் தெரிவித்த பிரபல வழக்கறிஞர்களான ரோஹிந்தன் எஃப் நாரிமன், யு யு லலித் மற்றும் எல் நாகேஸ்வர ராவ் போன்றோர், இந்த அதிக வரிவிதிப்பிலிருந்து தப்புகிறார்கள். பதிலாக, அவர்கள் தாங்கள் இதுவரை பெற்றுவந்த மிக அதிக வருவாயையும் இழக்கிறார்கள்.