காஜியாபாத்

த்திரப் பிரதேசம் காஜியாபாத் மாவட்ட நீதிபதி மகனால் விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோருக்கு உதவி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தில் வசித்து வரும் முதியவர் இந்திரஜித் குரோவர் ஒரு இதய நோயாளி ஆவார். அவருடைய மனைவி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர் ஆவார். தற்போது 68 வயதாகும் இருவருக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவருக்கும் மணமாகி விட்டது. சமீபத்தில் இந்த முதிய தம்பதியினர் ஒரு வீடியோ ஒன்றை மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி உள்ளனர்.

அந்த வீடியோவில் இந்திரஜித் குரோவர், “உடல் நிலை சரியில்லாத நானும் என் மனைவியும் எங்கள் சொந்த சேமிப்பில் வாங்கிய ஒரு வீட்டில் வசித்து வந்தோம். எனது மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். எனது மகனும் மருமகளும் எங்களை மிகவும் கொடுமை செய்கின்றனர். எங்கள் வீட்டில் இருவரும் தங்கிக் கொண்டு எங்களை வீட்டை விட்டு விரட்டி உள்ளனர்.

எங்கள் மகனுக்கு நாங்கள் எங்கு செல்வோம் என்பது குறித்தோ அல்லது நாங்கள் வாழ்வோமா சாவோமா என்பது குறித்தும் அக்கறை இல்லை. இது குறித்து நான் எழுத்து மூலமாக புகார் அனுப்பி உள்ளேன். அதிகாரிகள் எங்களை இந்த பேராசை பிடித்த மகன் மற்றும் மருமகளிடம் இருந்து காப்பாற்றி எங்கள் வீட்டில் எங்களை வசிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு தற்கொலையை தவிர வேறு வழி இல்லை” என தெரிவித்துள்ளார். அவர் பக்கத்தில் அவர் மனைவி அழுதபடி இருந்துள்ளார்.

இந்த வீடியோவைக் கண்ட மாவட்ட நீதிபதி மிகவும் வருத்தமடைந்து தக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதிகாரிகள் இது ஒரு குடும்பத் தகராறு என்பதை கண்டறிந்துள்ளனர். அதை ஒட்டி இந்திரஜித் குரோவரின் மகனிடம் வீட்டை 10 தினங்களில் காலி செய்வதாக உறுதி பத்திரம் எழுதி வாங்கி உள்ளனர். இந்த தகவலை மாவட்ட நீதிபதி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.