சென்னை:  மேம்பால புனரமைப்பு பணிகள் நடெபற உள்ளதால், வியாசர்பாடி, எம்கேபிநகர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் சாலையில் உள்ள எம்கேபி நகர் பழையமேம்பாலம் சென்னை மாநகராட்சியினரால் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக இன்று (21-ம் தேதி) முதல் அடுத்த மாதம் 20-ம் தேதிவரை வியாசர்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், புளியந்தோப்பு மற்றும்வியாசர்பாடி போக்குவரத்து காவல்நிலையங்களுக்கு உட்பட்ட டாக்டர்அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதைக்கு மேல் போக்குவரத்து மேம்பால கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் இன்று முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையின் குறுக்கே கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து மேம்பால கட்டுமானப் பணி நடைபெற உள்ளது. எனவே, இந்த பகுதிகளிலும் இன்றுமுதல் 2025 ஜனவரி 20-ம்தேதி வரை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனப் போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.