சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் இடையே பறக்கும் ரயில் சேவை கொண்டுவர  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.10ஆயிரம் கோடி செலவாகும் என திட்ட அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் செங்கல்பட்டு மாவட்டத்தின் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக 13 கிராமங்கள், நீர் நிலைகள் காலி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், புறநகர் பகுதிகளில் இருந்து பரந்தூர் வர அனைத்து வகையான வசதிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முனைந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஏ. சித்திக், தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இந்த ஆய்வறிக்கையை அளித்துள்ளார்.

 பூவிருந்தமல்லி-பரந்தூர் இடையே பறக்கும் ரயில்சேவை  கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக,  ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பூந்தமல்லி பரந்தூர் இடையேயான சமார்  43.63 கிலோ மீட்டர் தொலைவுக்கு 19 பறக்கும் ரயில் நிலையங்களுடன் பறக்கும் ரயில் சேவை  அமைக்கப்படவிருக்கிறது. இதற்கு ரூ.10,712 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன், இந்த திட்டம்  திருமழிசையில் உருவாகவிருக்கும் பேருந்து முனையத்தையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. அந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகே இப்பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவையை கோயம்பேடு – ஆவடி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. 16.07 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் 15 ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. இதற்கு ரூ.6,376.18 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுளள்து.