திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு (2023) வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் 4 மாவட்டங்களை புரட்டிப்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 3வது வாரத்தில், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்து, ஏரி குளங்கள், அணைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கொடுத்து ஓடியது. இதனால் நெல்லை, குமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் முதல் நகரங்களை வரை வெள்ள நீரால் சூழப்பட்டு, புதிய வரலாற்றை படைத்தது.
இந்த ஆண்டு மழை வெள்ளத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயும் திமுக அரசு முறையாக கையாளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முறையாக ஏரி, குளங்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டு, செப்பனிடப்பட்டிருந்தால், இந்த பேரழிவை தவிர்த்திருக்கலாம் என்றும், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்தி இல்லை என்று அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், என்ன செய்வது என்று தெரியா திமுக அரசு, மத்தியஅரசின் வானிலை முன்னறிவிப்பு சரியாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையமோ, “2 பேரிடர்களின்போதும் முறையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 21 செமீ-க்கு மேல் (அதிகனமழை) என்றால் அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் பெய்யலாம். அதை கணிக்க முடியாது’’ என விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் அட்டைகள் மூலம் தலா ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், மேலும் சேதங்களுக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நிவாரண பண உதவிவழங்கப்பட்டுள்ள தற்போது நெல்லை மாவட்டத்தில் ரு.6ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்காக கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதைத்தொடர்ந்து, இன்று காலை நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.