ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு சென்ற தனி விமானம் கடந்த வெள்ளியன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

ரோமானிய நாட்டைச் சேர்ந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ340ல் பயணம் செய்த இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற அழைத்துச் செல்லப்படுவதாகவும் ஆள் கடத்தல் சம்பவம் நடைபெறுவதாகவும் பிரான்ஸ் குடியுரிமை மற்றும் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த விமானம் பறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 301 பேர் அந்த விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

கிருஸ்துமஸ் விடுமுறை என்ற போதும் இந்த ஆள் கடத்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து விமான நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிக நீதிமன்ற அறையாக மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லும் சர்வதேச கடத்தல் கும்பலை நம்பி பணத்தை ஏமாந்தது தெரியவந்தது.

இதில் பலர் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேற சென்றுள்ளனர். 21 மாத குழந்தை உட்பட பல சிறுவர்களும் தங்கள் குடும்பத்துடன் இந்த விமானத்தில் வந்திருந்தனர்.

விசாரணையில் 25 பேர் பிரான்ஸ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைய விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவர்களைத் தவிர எஞ்சிய 301 பேர் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டிருப்பதை அடுத்து அவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நீதிமன்ற உத்தரவை அடுத்து லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் 301 பயணிகளுடன் இன்று இந்தியா திரும்புகிறது.

303 குஜராத்திகளுடன் பிரான்ஸ் மீது பறந்து சென்ற தனி விமானம் சிறைபிடிப்பு… அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது…