ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு 303 இந்தியர்களை ஏற்றிச் சென்ற தனி விமானத்தை ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசு சிறைப்பித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

ரோமானிய நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட நிலையில் தொழில்நுட்ப காரணங்களுக்காக கிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

அப்போது, இந்த விமானத்தில் உள்ள பயணிகள் “மனித கடத்தலுக்கு ஆளாகி இருப்பதாக” கிடைத்த தகவலை அடுத்து பிரான்ஸ் நாட்டு குடியுரிமை மற்றும் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் இவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒவ்வொருவரும் முகவர்களிடம் 30 முதல் 40 லட்சம் ரூபாயை கொடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேற முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நிகரகுவா-வில் இருந்து மெக்ஸிகோ வழியாக இவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ திட்டமிட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனி விமானத்தில் பயணம் செய்த மற்ற 301 பேரும் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளதாகவும் விமான பயணிகளிடம் தூதரக மட்ட விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2022 அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 97,000 இந்தியர்கள் அமெரிக்காவில் ஊடுருவி இருப்பதாகவும் அதில் 41,770 பேர் மெக்ஸிகோ வழியாக ஊடுருவியர்கள் என்று சமீபத்தில் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த 303 இந்தியர்கள் தனி விமானம் மூலம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சி மேற்கொண்டதாக பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.