டில்லி
இந்திய கன்ட்ரோலர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல் (சிஏஜி) குஜராத் அரசின் நிதி மேலாண்மை நடைமுறைகளில் உள்ள பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது
இந்தியத் தணிக்கையாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் எனப்படும் சி ஏ ஜி ஒவ்வொரு வருடமும் தனது தணிக்கை அறிக்கைகளை வெளியிடுகிறது.  இந்த அறிக்கையில் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.  அவ்வகையில் குஜராத் மாநிலம் குறித்த விமர்சனம் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத் மாநில நிதி மேலாண்மை நடைமுறைகள் குறித்து சி ஏ ஜி,  “குஜராத் நிதிநிலை கையேடு 1983 ன் படி, ஒரு தலைமையின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் அல்லது துணை மானியம் அல்லது ஒதுக்கீட்டை எதிர்பார்த்து எந்த செலவும் செய்ய முடியாது .  ஆனால். 2019-20 ஆம் ஆண்டில் இரண்டு முறை எந்த ஒதுக்கீடும் இல்லாமல்  ரூ .11.07 கோடிக்கு மேல் செலவாகி  உள்ளது.   இவ்வாறு  ஒதுக்கீடு இல்லாமல் செலவிடுவது நிதி விதிமுறைகளை மீறுவது மற்றும் “நிதி ஒழுக்கம் இல்லாததை” குறிக்கிறது.
பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக் கணக்குகள் அரசு கணக்குகளில் வராமல் செலவழிக்கப்பட்டுள்ளன.  இதனால் இந்த பஞ்சாயத்துக்களில் பயன்படுத்தாமல் உள்ள நிதி குறித்துக் கண்டறிய எவ்வித வழிமுறைகளுமில்லை.  தவிர உதவித்தொகைக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் மிகவும் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு 2001 – 02 முதல் 2018-19 வரையிலான கால கட்டத்தில் ரூ. 4,400.39 கோடி சான்றிதழ் இன்றி செலவழிக்கப்பட்டுள்ளது..  இது நிலுவையில் உள்ள தொகையில் 49% ஆகும்.
பல ஆண்டுகளாகியும் இந்த ரூ. 4,400 கோடி எப்படிச் செலவிடப்பட்டது என்பது குறித்து துறை அதிகாரிகள் இன்னும் விளக்கவில்லை.  சான்றிதழ் இல்லாத நிலையில், வழங்கப்பட்ட பணம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2015-20) மாநிலத்தின் மொத்த செலவினத்தில் இது சுமார் 37 சதவிகிதம் ஆகும், என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இவை அனைத்தும் மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் வரும் செலவினங்கள் ஆகும்.  இவை சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.  ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் விதிமுறைகள் மற்றும் செலவினங்களுக்கிடையேயான பொருந்தாத தன்மைகள் உள்ளன,
செலவுகள் நான்கு துணைத் தலைப்புகளின் கீழ் 22% முதல் 100% வரை இருக்கும். சில சந்தர்ப்பங்களில், மத்திய பங்களிப்பு 100 % இருந்தபோது, இந்த துறைகள் 37 % செலவை மட்டுமே செய்தது. இதற்கான திட்டமிடல் போதுமானதாக இல்லை என்பதை இது காட்டுகிறது.
உதவித் தொகைகள் அளிக்க மாநில நிதித்துறை பல்வேறு மாநில வாரியங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் அளிக்கும் “கணக்குகள் மற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ்கள் போன்றவற்றைச் சரிபார்க்காமல்” உதவித் தொகையை அளித்துள்ளது..
மாநிலத்தின் நிதித்துறை செய்யும் செலவுகள் சரியான மற்றும் அர்த்தமுள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  அவ்வாறு இல்லாவிடில் இந்த மாறுதல்களுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.  குறிப்பாக மாநில அரசு  மத்திய அரசின் பல நடைமுறைகளைப் புறக்கணித்துள்ளது.  இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.