சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில்   இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி  அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.

ஃபரித்கோட் மாவட்டத்தில் கிட்டர்பஹா எம்எல்ஏ ஹர்தீப் சிங் டிம்பி தில்லான் என்பவருக்கு சொந்தமான  நியூ டீப் டிரான்ஸ்போர்ட்ஸ்  பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து இன்று காலை எதிரே வந்த லாரியுடன் மோடி, கால்வாய்குள் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது .

 இன்று காலை அந்த தனியார் பேருந்தானது,  ஃபரித்கோட்-கோட்கபுரா சாலையில் காலை 8 மணியளவில் 36 பயணிகளுடன் பேருந்து முக்த்சாரில் இருந்து அமிர்தசரஸுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றது. தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து,  10 அடி உயரப் பாலத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து முதலில் ஒரு லாரியுடன் மோதி பின்னர் கால்வாயில் கவிழ்ந்ததாக, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக ஃபரித்கோட் மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரக்யா ஜெயின் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்தார். மேலும், 26 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள்  ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்தார். மருத்துவமனையில் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.