டெல்லி: மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இந்த வலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழக கடற்கரையில் மீனவளத்தை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்தது. அப்போது, இந்த மலையை மீனவர்கள் உபயோகப்படுத்தி மீன்பிடிப்பதால், கடல் வளம், மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால், மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் பவளப் பாறைகள் பாதிக்கப்படுகிறது என்று கூறியது.
ஆனால், இந்த வலையை வைத்து மீன்பிடித்தால், அதிக அளவிலான மீன்களை பிடிக்கலாம் என்பதால், மீனவர்களின் ஒரு தரப்பினர் அரசு ஆணைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,. கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஞானசேகரம் என்பவர் தனி மனுவாக தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை விதித்துள்ளது என்பது சட்ட விரோதம். குறிப்பாக கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன் பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும், வலைகளை பறிமுதல் செய்யப்படுவதாகவும், அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும், இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனவும், அதனால் சுருக்கு மடிப்பு வலைக்கான தடையை ரத்துசெய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்
வழக்கின் விசாரணையின்போது, இதுதொடர்பாக நிபுணர்குழு அமைத்து, அவர்களின் அறிக்கையை தாக்கல் செய்ய மத்தியஅரசிடம் உச்சநீதிமன்றம் கோரியிருந்தது. அதன்படி நிபுணர்கள் குழு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், சுருக்கு மடி வலையை வைத்து மீன் பிடிப்பது தவறு கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தமிழ்நாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியதுடன், வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது, திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தலாம், ஆனால், இந்த வலையை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் கருவியை பொருத்தியிருக்க வேண்டும். சுருக்குமடி வலையை பயன்படுத்த பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். சுருக்குமடி வலையுடன் கடலுக்குச் செல்லும் மீனர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக மீனவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சுருக்கு மடி வலை என்பது என்ன?
கரையிலிருந்து இழுக்கும் கரைமடி வலையின் அடுத்த பரிணாம வளர்ச்சியே சுருக்குமடி வலை எனப்படுகிறது. இது. கடலில் உள்ள நீரோட்டங்களுக்கு தகுந்த வகையில் இவ்வலை வீசப்படுகிறது. இவ்வலையின் விலை மிக அதிகம். இதை ஏழை மீனவர்கள் பயன்படுத்த முடியாது, மேலும், சாதாரண மரப்படகில் இதனை கொண்டு செல்ல முடியாது. ஃபைபர் படகு போன்ற விலையுயர்ந்த படகுதான் சரிப்பட்டுவரும். அதுபோல ஒரு குழுவினரால் மட்டுமே இந்த வலையை வீச முடியும், அதாவது, இந்த வலையை சுமார் 40 பேர் வரை கூட்டாக சேர்ந்துதான் மீன்பிடிக்க முடியும். ஒரு வலையின் எடை 10 டன் வரை இருக்கும்.
சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் என்பதால் இதற்கு சுருக்குமடி வலை என பெயர். கடலின் அடியில் 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடிவலையை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். ஒரு வேளை மீன்கள் இவ்வலையை கிழிக்க முயன்றால் உடனடியாக அதற்கு இணையாய் மற்றொரு வலையை போட்டு மீன்களை லாவகமாக பிடிக்க முடியும்.
சுருக்கு வலை படகில் சுறா வலை, மத்தி வலை என இருவகை வலைகள் பயன்படுத்தப்படுகிறது. மத்தி வலையில் சிறிய மீன்களான அயிலை, கானாங்கத்த, நெய்மீன், வேளா போன்ற மீன்கள் சிக்கும். ஒரு வலையின் மதிப்பு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் ஆகும். பெரிய வலை ரூ.1 கோடி வரை விலை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வலையை கடலில் வீசினால், அந்த பகுதியில் உள்ள அனைத்து கடல் உயிரினங்களும் வலையில் சிக்கிக்கொள்ளும். ஆனால், இந்த வலையை கொண்டு மீன்பிடித்தால்தான், லாபம் ஈட்ட முடியும் என்பதால், பெரும் நிறுவனங்கள் இந்த வலையை மீனவர்களுக்கு வழங்கி மீன்பிடித்தொழிலை அதிகரித்து வருகின்றன.
ஆனால், இந்த வலையை பயன்படுத்தி பெரு நிறுவனங்கள் மீன்களை அள்ளிச்செல்வதால், சாதாரண வலை பயன்படுத்தும் நாட்டுப்படகு மற்றும் பாரம்பர்ய படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிபுணர் குழு அறிக்கையில் கூறியது என்ன?
சுருக்குமடி வலைதொடர்பாக, மத்திய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தவறில்லை. அதற்கு தடை விதிப்பது என்பது இயற்கைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/எனவே, மீன்பிடி தடை காலம் இல்லாத சமயத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் படகின் அளவு, என்ஜின் திறன் அளவு, உள்ளிட்டவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து சில வழிமுறைகளை வகுக்கலாம். மேலும், சுருக்குமடி வலை பயன்படுத்தியதால் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதே வேளையில், சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது தொடர்பாக மிக ஆழ்ந்த ஆய்வும் நடத்தப்பட வேண்டியுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.