சென்னை: ‘ போலீஸ் அதிகாரிகள் மீது புகார்களை மாநில காவல்துறை புகார் ஆணையத்திடம்  தெரிவிக்க வேண்டும் என மாநில உள்துறை செயலாளர் அறிவித்து உள்ளார்.

காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் மற்றும் காவல்துறையினரால் பாதிக்கப்படுபவர்கள்,  காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. காவலர்கள் மீதான புகார்களை காவல்துறை  உயர்அதிகாரிகள் விசாரிப்பது சரியல்ல என உச்சநீதிமன்றம் கூறியதடன், ஆணையத்தின் உறுப்பினர்களை மாற்ற தமிழகஅரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி தலைமையில் 23ந்தேதி நடைபெற்ற ஆணையக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,   காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான நபர்கள் மீதான புகாரை கலெக்டர்களிடம் அளிக்க வேண்டும்’ என  அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  டி.எஸ்.பி. மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மீது புகார் அளிக்க விரும்புவோர் உள்துறை செயலர் தலைமையில் செயல்படும் மாநில காவல்துறை புகார் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும்.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.