சென்னை: இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் தமிழகம் வந்தடைந்தது. அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து  118 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் விசைப்படகு மீது மோதியது.

இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். சேவியர், சுகந்தன் ஆகிய 2 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கப்பல்படையினர் அராஜகத்தை கண்டித்தும்,  இறந்த மீனவர் ராஜ்கிரண் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேவியர், சுகந்தனை விடுவிக்க கோரியும்  புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்ட மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கடைத்தெருவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, மத்தியஅரசு இலங்கை அரசுடன் பேசியதைத் தொடர்ந்து, இறந்த ராஜ்கிரன் உடல் இலங்கையில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை9.30 மணி அளவில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராஜ்கிரன் உடலை வாங்க கோட்டைபட்டினத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள் மற்றும் இரண்டு மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்குள் சென்றனர்.   இந்திய சர்வதேச எல்லையில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர காவல்படையினரிடம் இருந்து  இறந்த மீனவர் ராஜ்கிரன் உடலைப் பெற்றுக்கொண்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு மீனவர் உடலுக்கு  தமிழக சட்டத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.