திருவாரூர்: தஞ்சை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு காலாவதியான மருந்து வழங்கட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டு உள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் 6வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில்  தடுப்பூசி முகாமினை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் இலக்காக 50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இன்று நடைபெறும் வரும் 6வது கட்ட முகாமில்,  மதியம் 1.30 மணி நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் 8 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார துறை சார்ந்த கட்டிடங்கள் புனரமைப்பு பணி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்கள்,  தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், அதுகுறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும்  அறிக்கை சமர்ப்பித்த பின் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என விதிமுறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.