சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முதலாக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில்  22 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் உள்பட பலர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் 21 பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் நூற்றுக்கணக்கான இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மத்தியஅரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழகஅரசு,  தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியை பெருக்குவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று  பல்கலைக்கழக துணைவேந்தர்களின்  மாநாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அலுவலர்கள், மாநில கொள்கை குழு தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல், பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்ட மாற்றம், அரசு கலை கல்லூரிகளில் இடங்களை அதிகரித்தல், மாநில கல்வி கொள்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாநில அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.