சென்னை: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழகஅரசு செலுத்தி வருகிறது. அதற்காக அரசு செலுத்தும் கல்வி கட்டணம் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.) 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது.

அந்தவகையில், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி,

1 முதல் 5-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர் ஒருவருக்கு 12 ஆயிரத்து 76 ரூபாய் 85 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேருபவர்களுக்காக 15 ஆயிரத்து 711 ரூபாய் 31 காசு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டைவிட கட்டணத்தை குறைத்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ.380 முதல் ரூ.1,360 வரை கட்டணத்தை குறைத்து தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.