சென்னை

சென்னையில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் புதிய திட்டங்களை அமைத்து  வருகின்றன.   ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் 10 ஆண்டுகளில் 100% பசுமை ரெயில் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.   அவ்வகையில் சென்னை மாநகராட்சியும் ஒரு புதிய திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மறு சுழற்சியாக அளிக்க உள்ளது.  இத்தகைய திட்டம் இந்தியாவில் முதல் முறையாகும்.   இதற்காக கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.   இந்த மாதம் இரண்டாம் வாரத்துக்குள் இந்த நிலையம் அமைக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சென்னை நகரம் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.   எனவே தொழிற்சாலை பயன்பாட்டுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.   இதன் மூலம் தண்ணீர் பிரச்சினை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இன்னொரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த பணி வரும் செப்டம்பரில் முடிவடிஅய உள்ளது.  இந்த இரு நிலையங்களிலும் தினம் 9 கோடி லிட்டர் கழிவு நீர் ஆர் ஓ முறைப்படி சுத்திகரிக்கப்பட உள்ளது.    வழக்கமாக கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படும்.  ஆனால் இனி இந்த நிலையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “கொடுங்கையூரில் அமைக்கப்படும் நிலையம் முதலில் தினம் 1.5 கோடி கழிவு நீர் சுத்தம் செய்ய உள்ளது.  அதன்  இராகு அந்த அளவு தினம் 3.5 கோடியாக அதிகரிக்கப்படும்.  அதன் பிறகு இந்த நிலையத்தின் முழு அளவான தினம் 4.5 கோடி லிட்டருக்கு அதிகரிக்கப்படும்.   தற்போது தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் தினம் 5 கோடி லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

இந்த இரு நிலையங்களும் செயல் படத் தொடங்கும் போது இந்த தேவை முழுவதும் அளிக்க ஏதுவாகும்.   இதன் மூலம் நல்ல நீர் வெகுவாக மிச்சமாகும்.  அவ்வாறு மிச்சமாகும் நீர் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், மாதவரம், மணலி,  சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர், தி நகர் மற்றும் மாம்பலத்துக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவிட்டுள்ளார்.