சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளில் முதல்கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி 24.08 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.  மொத்தம்91 ஆயிரத்து 975 உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று  (27-12-2019) முதல் கட்ட வாக்குப்பதிவு 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி, 24.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் ,வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் முழு சுதந்திரத்துடன் தங்களது வாக்கினை செலுத்துவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு பக்கத்தில் அமைக்கப்படும் முகாம்களுக்கு அருகே தேவையில்லாமல் கூடுதலை தவிர்க்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குபதிவு நாளில் தமது சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் போட்டியிடும் பதவிக்கு தொடர்புடைய பகுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.