சென்னை: ஒரு மாதத்திற்குள் 15 – 18 வயது சிறார்களுக்கு  முதல்தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்றுமுதல் 15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  ‘சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதவர்களிடம்  அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து,   பூஜ்யம் நோக்கி நகர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க  சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு கவனிப்பு மையம் அமைக்கப்படும்.

ஏற்கனவே கொரோனா 2வது அலை பரவலின்போது,  கடந்த மே, ஜூன் மாதங்களில் எங்கெல்லாம் கொரோனா சிறப்பு மையம் செயல்பட்டதோ, அந்த இடங்களில் மீண்டும் அமைக்கப்படும் என்றவர்,  கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைன் போய் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றவர், நாமே மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம் என்றார்.