சிவகாசி:

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றோடு 5வது நாளாக ஆலைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக லட்சக்கணக்கான  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகளுக்கான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து, விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 800 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி முறையில், பட்டாசுகளுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதுதொடர்பாக ஜூன் 26ம் தேதி, சிவகாசியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பட்டாசு களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, ஜூன் 30 (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவானது.

இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும், நேற்று மூடி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பட்டாசுத்தொழிலை நேரடியாக நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள், வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் லாரி ஷெட் உரிமையாளர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பட்டாசுக்கான 28 சதவீத வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நல்ல பதில் கிடைக்காத வரை, எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளனர்.

தொடர்ந்து 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு பொருள்களுக்கான வரி விதிப்பை 12% ஆக குறைக்க ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தால்ர ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்

‘ஜிஎஸ்டி வரிமுறையில் பகுதி இயந்திர தீப்பெட்டிக்கும், முழு இயந்திர தீப்பெட்டிக்கும் வரி வித்தியாசம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் உள்ள பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

6ம் தேதி காலை 10 மணிக்கு சாத்தூரில் தீப்பெட்டி தொழிலாளர்களின் பேரணி நடைபெறுகிறது