பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

Must read

விருதுநகர்:
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்று 30-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இங்கு ஏழுக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறிய நிலையில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய பாதுகாப்பின்றி கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்தினால் பட்டாசு ஆலையின் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். அத்துடன் பட்டாசு உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் , களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் இறந்த துயர செய்தியை கேட்டு மிகவும் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமுற்ற அவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article