மும்பை: தீபாவளியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்டாசு வெடிக்கலாம்  என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்துள்ளார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி அன்றுமட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவித்து உள்ளார். இது மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இருந்தாலும் தினசரி 40ஆயிரம் பேர் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பில்,  நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு  நேற்றும் 5586 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 17,19,858 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக 1,26,653 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் நடவடிக்கையாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவும் மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்க முதுன்பு  முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். ஏற்கனவே  ராஜஸ்தான், அரியானா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்கலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்க எந்தத்தடையும் விதிக்கப் போவதில்லை. அதே நேரத்தில், மக்களே பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மாநிலத்தில் வைரஸ் பரவல் குறைந்திருக்கும் சூழலில், பட்டாசுகள் மூலம் காற்று மாசு அதிகரித்தால், மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படும். இது அடுத்தகட்ட பொதுமுடக்கத்துக்கும் வழிவகுக்கும். எனவே, மக்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.