எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

Must read

 
சென்னை:
புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482-ன் கீழ், எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோருவது, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா? என்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி, மூத்த வழக்குரைஞர்களிடம் கருத்து கோரினார். அதன்படி மூத்த வழக்குரைஞர்கள் பலர் இந்தச் சட்டப்பிரிவு தொடர்பாக தங்களது வாதங்களை முன்மொழிந்தனர்.
1fir
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த விரிவான உத்தரவு:
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482-ன் கீழ் மனு தாக்கல் செய்யும்போது, அதில் போலீஸார் 6 வாரத்துக் குள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் காலவரையறை வகுத்துள்ளது.
ஆனால், இந்த நடைமுறையை யாருமே பின்பற்றுவதில்லை.
இந்தப் பிரிவின் கீழ் “எஃப்ஐஆர்’ பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்து உத்தரவும் பெறுகின்றனர். பின்னர் அதேவேகத்தில் எஃப்ஐஆர்-யை ரத்து செய்யக் கோரியும் மனுதாக்கல் செய்கின்றனர்.
எனவே இனி “எஃப்ஐஆர்’ பதிவு செய்யக் கோரி, நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடும் எந்த மனுவையும் நீதிமன்ற பதிவுத்துறை வழக்காக பட்டியலிடக்கூடாது.
“எஃப்ஐஆர்’ பதிவு செய்யக்கோரும் மனுதாரர்கள் முதலில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும்.
அந்த அதிகாரி அதற்கு உடனடியாக புகார் ஒப்புகை சீட்டு(சிஎஸ்ஆர்) வழங்க வேண்டும்.
அந்தப் புகார் கொடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் முறையான விசாரணை நடத்தி போலீஸார் “எஃப்ஐஆர்’ பதிவு செய்ய வேண்டும்.
 ஒருவேளை அந்தப் புகார் மீது “எஃப்ஐஆர்’ பதிவு செய்யத் தேவையில்லை என அந்த அதிகாரி நினைத்தால், புகாரை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும்.
அந்த போலீஸ் அதிகாரியின் செயல்பாடு புகார்தாரருக்கு திருப்தியளிக்கவில்லை என்றால்,மாவட்ட எஸ்பியை சந்தித்து அவர் புகார் அளிக்கலாம்.
அதன்பிறகும் உரிய நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது அவசர நிமித்தம் காரணமாகவோ சம்பந்தப்பட்ட நீதித் துறை குற்றவியல் நடுவரிடம், எஃப்ஐஆர் பதிய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யலாம்.
குற்றவியல் நடுவர், அந்த மனு மீது 15 நாள்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இந்த எல்லா நடவடிக்கைகளும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்த கால அவகாசத்திற்குள் மனுதாரருக்கு உரிய பரிகாரம் கிடைக்கவில்லை என்றால், அதன்பிறகுதான் அவர் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றத் தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், எஃப்ஐஆர் பதிய மறுக்கும் போலீஸ் அதிகாரிகள் குறித்து மனுதாரர்கள், இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவை நாடியும் பரிகாரம் தேடலாம்.
சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர்களின் பெயர், செல்லிடபேசி எண் உள்ளிட்ட விவரங்கள், அனைத்து காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளிலும் இடம்பெற வேண்டும்.
என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article