கும்பகோணம்:
செல்போன் மூலம் பருத்தியின் தரம் கண்டுபிடித்து விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கை கும்பகோணத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்மூலம் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
கும்பகோணம் பகுதியில் பருத்தி விவசாயம் பிரபலமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஒரே நாளில் 800 விவசாயிகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பருந்திகளை கொண்டு வந்து குவித்திருந்தனர்.
இந்த பருத்தியின் தரம் குறித்து, இந்திய பருத்தி கழக அதிகாரிகள் செல்போனில் உள்ள செயலி மூலம் தரம் குறித்து ஆராய்ந்து, விலை நிர்ணயம் செய்தனர்.
அதன்படி, குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 5, 500 வரை நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் அனுப்பப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த புதிய நடவடிக்கை காரணமாக, தங்களது பருத்திக்கு நியாயமான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.