சென்னை: திரைப்பட இயக்குநரும், கதாசிரியருமான  சொர்ணம் மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சொர்ணம் மறைவு குறித்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர்.

மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம்  கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய “இளைய சூரியன்”  வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர். எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.