சென்னை

ன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நேற்று சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீ்ன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.  செந்தில் பாலாஜி தரப்பில் டில்லி மூத்த வழக்குரைஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

அவர் தன் வாதத்தில்,

” தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டதால் சூழ்நிலைகள் மாறிவிட்டது. அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ள மின்னிலக்க ஆதாரங்கள் குறித்து விசாரணையின்போதுதான் நிரூபிக்க முடியும்.  ஆகவே ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் முதன்மை செசன்சு நீதிமன்றம் கூறியிருப்பது தவறு.  திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கிவிட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை.

எனவே அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அமலாக்கத்துறையின் வழக்கு சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ‘பென்டிரைவ், ஹார்டு டிஸ்க்’ போன்றவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. மொத்தம் 5 மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ள நிலையில், கீழ் நீதிமன்றத்தில் வேறு சாதனங்களைச் சமர்ப்பித்து அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ‘பென்டிரைவ்’ குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது., மற்றொரு அறிக்கையில் அந்த ‘பென்டிரைவில்’ 472 கோப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாகக்கூறி பணம் வசூலித்து அதைத் தனது உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாக கூறுகின்றனர். சண்முகம் செந்தில் பாலாஜியின் உதவியாளரே கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக எந்தவொரு பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை.

அவருடைய வங்கிக்கணக்கில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், அது மோசடியாக ஈட்டப்பட்ட தொகை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்தொகைக்கு முறையாக வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது., பொருளாதார ரீதியிலான குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக்கூடாது என பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்தும் 240 நாட்களுக்கும் மேலாகச் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

அவர் தற்போது அமைச்சர் கிடையாது.. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விடுவார் என்பதாலோ அவரது தம்பி தலைமறைவாக உள்ளார் என்பதாலோ செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுக்க முடியாது. ஆகவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ”

என்று அவர் கூறினார்.

இவற்றை மறுத்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார். அவர் ‘இந்த வழக்கில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆவணங்களும், சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டவைதான்’ என்று கூறினார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தொடர் வாதத்துக்காக விசாரணையை இன்று  விசாரிப்பதாக உத்தரவிட்டார்.