தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில்
தில்லை விளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன. மிக ரம்மியமான ஒரு சூழலில் அமைந்திருக்கிறது தில்லை விளாகம் கோதண்டராமர் கோயில். கருவறையில் கற்சிலைகளே கிடையாது. பூமியிலிருந்து வெளிப்பட்ட பஞ்சலோகச் சிலைகளே மூலவராக அருள்பாலிப்பதுதான் இத்தலத்தின் முதன்மையான சிறப்பு. ராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக்கிறார்.
திருமுகம் அன்றலர்ந்த தாமரையாக மலர்ந்து கிடக்கிறது. வனவாசம் முடித்து நாடு திரும்பும் பூரண மகிழ்ச்சி முகம் முழுதும் பொங்கிப் பரவியிருக்கிறது. கோதண்டத்தை தாங்கி நிற்கும் ஒயிலும், இடுப்பின் குழைவும் சிலிர்ப்பூட்டும் பேரழகு. உலகிலேயே வேறு எங்கும் காணமுடியாத அற்புதம், கைகளின் விரல் நகங்கள், நரம்புகளின் புடைப்புகள், மச்சங்கள், வலது காலில் ஓடும் பச்சை நரம்புகளெல்லாம் பார்க்கும்போது இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும்போலுள்ளது.
பேசினால் பேசுவாரோ என்று கூடத் தோன்றுகிறது. வலது கையில் சாதாரணமாக அர்த்த சந்திரபாணம் என்ற பிறைநிலா வடிவிலான பாணம்தான் இருக்கும். ஆனால் இங்கு ராமசரம் எனும் பாணம் தரித்திருப்பது மிகவும் அபூர்வமானது. ஏவப்பட்ட பிறகு அழித்து விட்டு மீண்டும் இவரிடமே திரும்பும் விசித்திரமானது. சீதை அன்பும், கனிவும், இனிமையும் பொலிய பேரழகு பிராட்டியாக சேவைசாதிக்கிறாள். இளையாழ்வார லட்சுமணர் கம்பீரத்தோடு சேர்ந்த பணிவோடு அண்ணலுக்கு அருமைச் சகோதரனாக நின்றிருக்கிறார்.
எல்லாவற்றையும் தாண்டி ராமதாசனான அனுமன் தன்னை சிறியோனாக நினைத்து மிக பவ்யமாக வாய்பொத்தி, விநயமாக தலை தாழ்த்தி நிற்கும் பாங்கு வேறெங்கும் காணமுடியாது. பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு வெற்றியோடு திரும்பியதால் வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்குகிறார், வீரகோதண்டராமர். கருவறையே ஒரு ராஜதர்பார் போன்று விளங்குகிறது. இத்தலம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ளது.