சென்னை: பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணியில்  திமுகவினர் திரளாக பங்கேற்க  வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும் அமைதிப்பேரணி எத்திசையும் பேரறிஞரின் பேரொளி பரவி இந்தியாவின் இருள் அகலுவதற்கான தொடக்கமாக அமையட்டும்!

எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில், தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்து மிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா என போற்றப்பட்டவர் பேரறிஞர் அண்ணா என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா என்றும் நம் மனதில் வாழ்கிறார் எனவும், இன்றும் இந்த மண்ணை ஆள்கிறார் என தெரிவித்துள்ள முதலமைச்சர், அன்னை நிலத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி முழங்கிய முழக்கம் இன்றும் ஒலிக்கிறது எனவும், இதற்கு மாற்றான குரல்கள், அனைத்துத் தரப்பு மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தம்மை மாற்றிக் கொள்ளும் நல்லதொரு நிலையை நாடு காண்பதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையொட்டி பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளில், வழக்கமாக நடத்தப்பட்டு வரும் அமைதிப் பேரணியில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.