சென்னை:  கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதிக்கு, திமுக அரசு, அரசு செலவில்,  மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவாலயம் எழுப்பி வருகிறது.  அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் பிரமாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து. மேலும் ரூ.81 கோடி செலவில், மெரினா கடலுக்குள்  134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதற்காக கடற்கரையில் இருந்து கண்ணாடி பாலமும் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில்,  பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்  நடைபெற்றது. இதில், பல திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டு, அரங்கத்தை நிரப்பினர். இதனால் மாற்று கருத்துச்சொல்ல முனைந்தவர்கள், பதற்றம் அடைந்தனர்.  பலர் கருத்து தெரிவிக்காமல் திரும்பிய நிலையில், முகிலன் உள்பட சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு அங்கிருந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓலமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், முகிலன் உள்பட சிலர் அங்கிருந்து காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். அதுபோல,  பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்கருத்தை பதிவு செய்ய திமுகவினர் தடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக பொதுப்பணித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், முன்னாள் முதல்-அமைச்சரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமைய வுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.