நாமக்கல்: தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை மத்தியஅரசு  அரசு உயர்த்திய நிலையில், அதற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும் செயல்படுவதை கண்டித்து,  வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள்  தமிழ்நாட்டில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற  லாரி உரிமையாளர்கள் சங்க  செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, 25ந்தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது.

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நேற்று மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை மத்தியஅரசு  உயர்த்தியது குறித்து, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன்வராதது குறித்தும் விவாதித்தனர்.

பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தன்ராஜ்,  15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிக்க கட்டணம் ரூ.2,500 இருந்து வந்தது.   2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தியது.

அதன்படி ,15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், மினி சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.14,500 ஆகவும் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ 28,200 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது.

ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயர்ந்து இருப்பதால் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் தகுதி சான்றிதழை புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளனர்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏறத்தாழ 10 மடங்கு வரை தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் ஒரு லாரி வைத்து தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தகுதிச்சான்றிதழ் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்தாலும், மாநில அரசு அதனை நிறுத்தி வைக்கலாம். இதனால் தகுதி சான்றிதழ் புதுப்பிக்க முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு லாரியை நம்பி 10 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. சுமார் ஒரு கோடி வாக்குகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் இருக்கிறது. எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறும். இந்த முறை ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்த உள்ளோம்.

தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 25- ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 6.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சுமார் 20,000 லாரிகள் டெல்டா மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் ஏற்றிச்செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.