கோராக்பூர்:

ஆதித்யாநாத் பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தை உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல தந்தையை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் கடந்த ஒரு வாரத்தில் 64 பேர் இறந்துள்ளனர். நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தைக்கு மேலும் ஒரு கொடுமையை மருத்துவமனை நிர்வாகம் செய்திருப்பது தற்போது வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனையை ஆய்வு செய்ய முதல்வர் ஆதித்யாநாத் வருகை தர இருந்தார். இவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி மருத்துவமனை நிர்வாகம் ஒரு குழந்தையின் உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல தந்தையை கட்டாயப்படுத்தியாக செய்திகள் வெளியானது. ‘நியூஸ் நேஷன்’ என்ற செய்தி நிறுவன செய்தியாளர் இறந்த குழந்தையின் தந்தை ஒருவரிடம் பேட்டி எடுத்தார்.

‘‘குழந்தை உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படவில்லை. மாறாக ஆட்டோ ரிக்ஷா மூலம் குழந்தையில் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தினர்.

அங்கிருந்த பெண் மருத்துவர்கள் இதை கூறியதால் வேறு வழியின்றி எனது 9 மாத குழந்தையில் ஆட்டோவில் எடுத்து சென்று புதைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

‘‘ இது மாநில அரசு நடத்திய ஒரு கொலை சம்பவம். கோராக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு யோகி ஆதித்யாநாத் தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் தெரிவித்தார்.