சாத்தான்குளம்:
காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று  முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விசாரணை கோப்புகள் விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.நா. சபையே முதல்வர் எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியது.
இதையடுத்து, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவதாக முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, உள்துறை அமைச்சகமும் சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து,  சிபிஐ வழக்கு பதிவு செய்து செய்துள்ளது.  விரைவில் வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்க  சிபிஐ, குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல்கள்   வெளியாகி உள்ளன.  இதன் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி.  காவல்துறையினர் சிபிஐ வசம் ஒப்படைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக சிபிஐயின் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர் கூறுகையில், ‘சாத்தான்குளத்தில்  வியாபாரிகள் 2 பேர் லாக் அப்பில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண் 649/2020 மற்றும் 650/2020 ஆகியவற்றை சிபிஐ பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது’ .
இது தொடர்பாக மேலும் 5 போலீசாரை விசாரிக்கிறோம். 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும்   கூறியுள்ளார்.