கோவை

பொதுத் தேர்வு எழுத கேரள அரசு சிறப்புப் பேருந்தை அனுப்பிய பழங்குடியை சேர்ந்த பெண் 95% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ள பூச்சுகொட்டாம்பாறை என்னும் ஊர் பழங்குடியினர் வசிக்கும் சிற்றூராகும்.  இந்த ஊரில் மின்சாரம், மொபைல் சேவை எதுவும் கிடையாது,  அருகில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால்  இங்குள்ள மாணவ மாணவிகளில் பலர் ஆரம்பப் பள்ளி மற்றும் நடுத்தரப் பள்ளியுடன் கல்வியை நிறுத்தி உள்ளனர்.   படிப்பை நிறுத்திய மாணவிகள் தங்கள் இனத்தில் யாரையாவது திருமணம் செய்துக் கொள்வார்கள்.  மாணவர்கள்  பணி புரிய தொடங்குவார்கள்.

இந்த சிற்றூரில் அதிசயமாக ஸ்ரீதேவி என்னும் பெண் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார்.  இவர் கேரளாவில் உள்ள சாலக்குடி என்னும் ஊரில் தங்கும் வசதியுடன் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.   பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பித்ததும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.  அவர் இதற்காகக் கால்நடையாக நடந்து வந்து கேரள எல்லையை அடைந்து அங்கிருந்து அவருடைய தந்தை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அவர் மீதமுள்ள தேர்வு எழுதப் போக்குவரத்து வசதி இன்றி திண்டாடினார்.  இதை அறிந்த கேரள அரசு ஸ்ரீதேவி ஒரு மாணவிக்காகச் சிறப்புப் பேருந்தை இயக்கியது.  அந்த பேருந்து மூலம் அவர் பள்ளிக்குச் சென்று மீதமுள்ள தேர்வுகளை எழுதினார்.  தற்போது வெளியான தேர்வு முடிவுகளின்படி அவர் 95% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.   அவருடைய ஊரில் அவருடைய இனத்தில்  இவ்வளவு படித்தவரும்  95% மதிப்பெண் பெற்றவரும் இல்லை என்பது மாணவி ஸ்ரீதேவிக்குக் கிடைத்துள்ள பெருமையாகும்.