டில்லி

ரு நாடு ஒரு அட்டை என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் ஃபாஸ்டாக் அட்டைகள் நாடெங்கும் வரும் டிசம்பர் முதல் அமலாகிறது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளால் பல வாகனங்கள் காத்து நிற்க நேரிடுகின்றது.   இதனால் பல  பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.   குறிப்பாகச் சரக்கு லாரிகள் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஃபாஸ்டாக் என்னும் புதிய முறையை அமல்படுத்தத் திட்டமிட்டது.  ஒரு நாடு ஒரு அட்டை என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் வாகனம் செலுத்துவோர் இந்த அட்டையைக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் இந்த அட்டையைக் காட்டி விட்டுச் செல்ல முடியும்.   சுங்கக் கட்டணம் இந்த அட்டையில் உள்ள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.   இதனால் நேரம் மிச்சமாகும் எனக் கூறப்பட்டது.   இந்த திட்டத்தில் இணையப் பல மாநில அரசின் சாலை உரிமை அமைப்புக்களும் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டுள்ளன.

இவ்வாறு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இந்த ஃபாஸ்டாக் அட்டையை அமல்படுத்தப் பல தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளன.   இந்த நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகின்றன.   முதல் கட்டமாகச் சென்ற ஆண்டு வரி சுமார் 25000 கிமீ தூரச் சாலைகள் இதில் இணைக்கப்பட்டன.    வரும் டிசம்பர் மாதம் மேலும் சில சாலைகள் இணைக்கப்பட உள்ளன.  அதன் பிறகே இந்த திட்டம் அமலாக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.