டில்லி

ரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் நீதிமன்றப் பிரச்சினை ஆனது குறித்த ஒரு விளக்கம் இதோ.

அரசு தனது சாலை அமைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புப் பணிகளுக்காகத் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி அங்கு பணிகளைச் செய்து வருகிறது.   இதற்கு நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    தங்கள் நிலத்தைச் சொற்ப தொகை அளித்து அரசு ஆக்கிரமித்து  வருவதாக நில உரிமையாளர்கள் தொடர்ந்து அரசைக் குறை கூறி வந்தனர்.  அதையொட்டி 2013 ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது.

அதன்படி நில உரிமையாளர்களுக்கு அரசு வழிகாட்டு விலைக்கு பதிலாக அப்போதைய சந்தை விலை அளிக்க வேண்டும் என மாற்றப்பட்டது.  அத்துடன் இந்த இழப்பீடு முழுமையாக ஐந்து ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் எனவும் சட்டம் திருத்தப்பட்டது.    இதில் எழும் கேள்வி என்னவென்றால் நில உரிமையாளர் அந்த இழப்பீட்டுத் தொகையை வாங்க மறுத்தாலும் அதை அரசு அளித்துள்ளதாகக் கருதப்படுமா என்பதாகும்.

இது குறித்த வழக்கு ஒன்றில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பில் ”ஒரு மாநிலம் இழப்பிட்டுத் தொகையைக் கருவூலத்தில் செலுத்துவதன் மூலம் நில உரிமையாளர்களுக்கு அளித்ததாகக் கருத முடியாது.  அந்தப் பணத்தை நீதிமன்றம் மூலம் செலுத்த வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அமர்வு இழப்பீட்டுத் தொகையைக் கருவூலத்தில் செலுத்தினால் போதுமானது எனத் தீர்ப்பளித்தது.   இந்த புதிய தீர்ப்பில் 2014 ஆம் வருடம் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்வதாகவும் இனி அந்த தீர்ப்பை வேறு எந்த நீதிமன்றமும் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மற்றொரு வழக்கு வேறொரு அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.  இந்த அமர்வில் 2014 ஆம் வருட வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த இரு நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர்.  அந்த அமர்வு 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தது.  அத்துடன் ஒரு அமர்வு அளித்த தீர்பை மற்றொரு அமர்வு ரத்து செய்ய முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவித்தது.

இதையொட்டி உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்தது.   நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் ஆன இந்த அமர்வு நேற்று இந்த வழக்கை விசாரித்தது.   கடந்த 2018 ஆம் வருடம் 2014 ஆம் வருடத் தீர்ப்பை ரத்து செய்த அமர்வில் இடம் பெற்றிருந்த மூன்று நீதிபதிகளில் அருண் மிஸ்ராவும் ஒருவர் ஆவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான தீர்ப்பு நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக இருந்ததால் அவர்கள் சார்பில் இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் அருண்மிஸ்ரா இடம் பெறக்கூடாது என வாதிடப்பட்டது.    இந்த வழக்கு குறித்து அவர் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் அவரே நீதிபதியாக இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.   ஆனால் மிஸ்ரா அமர்வில் இருந்து விலக மறுத்துள்ளது நீதிமன்றப் பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.