டில்லி

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மைக்கேல் கிரெம்மருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்களைக் காண்போம்.

இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூவர் அபிஜித் பானர்ஜி,  அவர் மனைவி எஸ்தர் மற்றும் மைக்கேல் கிரெம்மர் ஆகியோர் ஆவார்கள்.   இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற போதிலும் அவரும் அவர் மனையும் இந்தியாவுக்கு பல பணிகள் செய்துள்ளனர்.   தற்போது மூன்றாவதாக உள்ள மைக்கேல் கிரெம்மர் குறித்த விவரங்களைக் காண்போம்.

இந்தியாவின் முக்கிய தொழில் விவசாயம் என்பது அனைவரும் அறிந்ததே.   மைக்கேல்  கிரெம்மர் அமைத்துள்ள நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மொபைல் மூலம் பல தீர்வுகளை அளித்து வருகிறது.  துல்லிய விவசாய முன்னேற்றம் என்னும் பொருள் கொண்ட பெயரில் இயங்கி வரும் இந்த அமைப்பு குஜராத் மாநிலத்தில் உள்ள பருத்தி விவசாயிகளில் இருந்து கர்நாடக மாநில காபி விவசாயிகள், நாடெங்கும் உள்ள நெல் மற்றும் கோதுமை விவசாயிகள் உள்ளிட்டோருக்குப் பல சேவைகள் செய்து வருகிறது.

இந்த அமைப்பு விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து, அறுவடை யோசனைகள் எனப் பல வகையிலும் உதவிகள் புரிந்து வருகிறது.   இந்த அமைபினாலோசனை மூலம் நாட்டில் விவசாய உற்பத்தி 8.6% அதிகரித்துள்ளது.  இவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநில பருத்தி விவசாயிகள் ஆவார்கள்.

கடந்த 2016 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2000 பருத்தி விவசாயிகளுடன் தொடங்கிய இந்த அமைப்பு தற்போது நாடெங்கும் 6 லட்சம் விவசாயிகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.    இதில் கர்நாடகாவைச் சேர்ந்த 15000 காபி பயிரிடுவோர் மற்றும் 5.25 நெல் பயிரிடுவோரும் அடங்குவார்கள்.   இந்நிறுவனத்துக்குத் தினமும் 800-1000 பேர் ஆலோசனை கேட்டு அழைக்கின்றனர்.  இவர்கள் கேள்விகளுக்கு 24 மணி நேரத்த்க்குள் ஆலோசனை வழங்கப்படுகிறது.