சென்னை,
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென ஏர்கலப்பையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏற்கனவே டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி நாடு முழுவதும் விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 22ந்தேதி மீண்டும் டில்லியில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் டில்லியில் இருந்து ரெயில் மூலம் இன்று சென்னை திரும்பினார்கள்.
இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் வந்திறங்கிய அவர்கள், உடனே அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது,
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், 3 மாதங்களை கடந்தபிறகும், எங்களது கோரிக்கைகள் எதையும் முதல்வர் நிறைவேற்ற வில்லை.
எனவே, அவரை சந்திக்க நாங்கள் பேரணியாக செல்ல இருக்கிறோம். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் ரெயில் நிலையத்துக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார்.
இந்த திடீர் போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அரை நிர்வாணத்துடன் கலப்பை, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளுடன் அமர்ந்து இருந்தார்கள்.