டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டத்தின் ஓராண்டு நிறைவின் நினைவாக, நாடாளுமன்றத்தை நோக்கி  டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும், இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும்  கலந்து கொள்ள  வேண்டும் என சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த  கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்த, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து விவசாயிகளும் பேரணி நடத்தப்படும் என்று  சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடங்கப்பட்டு வரும் நவம்பர் 26 அன்று ஓராண்டு முடியும் நிலையில் அதனை யொட்டி டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின்போது, ஒவ்வொரு நாளும் 500 விவசாயிகள் அமைதியான முறையில் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியானது  வரும் நவம்பர் 29 தொடங்கி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரையில், ஒவ்வொரு நாளும்  விவசாயிகள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், தங்கள் போராட்ட உரிமையை நிலைநாட்டவும் டிராக்டர்களில் பேரணி நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்தின் தொடக்கமாக, நவம்பர் 26 அன்று டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் விவசாயிகள் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது.  தொடர்ந்து, டெல்லியின் எல்லைகளில் அன்று மிகப்பெரிய பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  மாநிலத் தலைநகரங்களில் பெரியளவிலான மகாபஞ்சாயத்துகளை நடத்த வேண்டும் எனவும் விவசாய சங்கங்களை சம்யுக்தா கிஸான் மோர்ச்சா கேட்டுக்கொண்டுள்ளது.