புதுச்சேரி: பிரபல மூத்த எழுத்தாளரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் புகழப்படுபவருமான கி.ராஜநாராயணனர் காலமானார். அவருக்கு வயது 98. வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர்  நேற்று நள்ளிரவு (மே 17-ம் தேதி) புதுச்சேரியில் உள்ள அவர் இல்லத்திலேயே  மரணம் அடைந்தார்.

கி. ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக தமிழகத்தின் தென்மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் என்ற கிராமத்தில் பிறந்தார்.

கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா. சாகித்ய அகாதெமி விருந்து, இலக்கியச் சிந்தனை விருது, கனடா தமிழ் தோட்ட விருது ஆகிய விருதுகளைப் பெற்ற கி.ரா, புதுச்சேரியில் வசித்துவந்தார்.

‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியவர். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதிய கி.ரா. ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா‌ நோய் தொற்று சூழலில், பெண்களைப் பற்றிய “அண்டரண்டப்பட்சி” என புத்தகத்தை தன் கைப்பட எழுதியுள்ளார். இதை அச்சில் பதிக்காமல், கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விரும்பி எழுதினார்.

மேலும் சாதி குறித்த “சாவஞ்செத்த சாதிகள்” என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு “மிச்ச கதைகள்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கி.ரா. கடந்த ஆண்டு தனது சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தாம் எழுதிய படைப்புகள் அனைத்தின் உரிமையையும் தமது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனிலுக்கு எழுதி வைத்துள்ளார்.

இதன் மூலம் தமது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் தமது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை “கரிசல் அறக்கட்டளை” என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார்.

தற்போது லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று (18-ம் தேதி) மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது

கி.ராவின் மறைவுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அரசியல் தலைவர்கள்‌, எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.