டில்லி

பிரபல சட்ட வல்லுனர் என் எம் கட்டாலே ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என யோசனை கூறி உள்ளார்.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை உலகம் முழுவதுமே உள்ளது.   சில நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.   பல குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுவது அமெரிக்கா உட்பட பல நாடுகளில் வழக்கமான ஒன்றாகும்.   பிரபல சட்ட வல்லுனரும், இந்திய சட்ட கமிஷனின் துணைத்தலைவருமான என் எம் கட்டாடே  இது குறித்து தன் கருத்தை கூறி உள்ளார்.

கட்டாடே, “இந்தியா போன்ற நாடுகளில் மரண தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய முடியாது.   நான் மரண தண்டனை ரத்து என்பதை ஆதரிக்கவில்லை.  அதே நேரத்தில் தூக்கு தண்டனை என்பது எனக்கு உடன்பாடில்லை.   ஒருவரை இறக்கும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.   ஆனால் தூக்கினால் மட்டுமே உடனடியாக மரணம் ஏற்படுகிறதா என்பது இன்னும் மருத்துவ ரீதியாக முடிவு செய்யப்படவில்லை.

தூக்கில் போடுவது மூலம் தண்டு வடம் முறிந்து உடனடியாக மரணம் ஏற்படும் என்பது வாதத்துக்கு சரியாக இருக்கலாம்.   ஆனால் பல நேரங்களில் தண்டு வடம் முறிந்த பிறகும் உயிர் பிரியாமல் மூச்சுத் திணறலால் உயிர் பிரிகிறது.  இது மிகவும் வலி ஊட்டும் மரணமாகும்.    இது பலமுறை நிகழ்ந்துள்ளது.   மேலும் மரண தண்டனையால் உயிர் இழந்த சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை.   அப்படி செய்யப்பட்டால் மரணத்துக்கான உண்மைக் காரணங்கள் தெரியவரும்.

பல முன்னேற்றம் அடைந்த நாடுகளில் தற்போது விழ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.  சக்தி வாய்ந்த மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் போது வலி அற்ற மரணம் ஏற்படுவது இயற்கையே.   இதன் மூலம் தூக்கிலிடுவது என்னும் காட்டு மிராண்டி வழக்கத்தை ஒழிக்கலாம்.    மருத்துவர்கள் தாங்கள் அனைத்து உயிரையும் காப்பாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துள்ளதால், இதற்காக செவிலியர்களை பயன்படுத்தலாம்.    அதுவும் இரு செவிலியர்களைக் கொண்டு ஒருவரிடம்  மருந்தும், மற்றவரிடம் வெறும் தண்ணீரும் உள்ள ஊசிகளை போட வைத்தால் எந்த ஊசியால் அவர் இறந்தார் என்பது தெரியாது.  இதன் மூலம் செவிலியர்களுக்கு குற்ற உணர்ச்சியும் இருக்காது” என கருத்து தெரிவித்துள்ளார்.