விசாகப்பட்டினம்:
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில்  சனிக்கிழமை நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நேற்று விசாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த போது ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த கார் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கஞ்சிலி என்ற இடத்தில் ஒரு லாரி மீது மோதியுள்ளது.
தனது மருமகன் பி. பாஸ்கர் ராவின் இறுதிச்சடங்கிற்கு விசாகப்பட்டினம் சென்றுகொண்டிருந்த நாகமணி (48) லாவண்யா (23) மற்றும் வாகன ஓட்டுனர் ரவ்டூ த்வாரகா (23) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகமணியின் இரண்டு மகன்களும் மற்றொரு மருமகளும் காயமடைந்து சோம்பேட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் ஸ்ரீகாகுளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகமணியின் இரண்டு மகன்களில் ஒருவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் ஒரு பெரிய கிரேன் கீழே விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், இதில் தங்களுடைய மருமகனும் உயிரிழந்ததை கேள்விப்பட்ட உறவினர்கள் மேற்குவங்காளம் கரக்பூரிலிருந்து புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரேன் விபத்தை பற்றி விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஷிப்யார்டு இயக்கத்தின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டாலும்  மற்றொரு குழு ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிரேன் விபத்து குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் குழுவின் மூலம், விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்களுக்கு தலா 50 லட்சம் அருட்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான முத்தம்செட்டி ஸ்ரீனிவாச ராவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.