சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை கொடுத்த  நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும்  சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த விசாரணையின்போது காணொலி மூலம் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில்  மக்கள் மட்டுமின்றி காடுகள், மலைப்பிரதேசங்களில் வசிக்கும் கால்நடைகள், விலங்குகளும்,  அங்கு சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கு பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்களில் கோரிக்கையாக இருந்து வந்தது. இதைத்தொடர்ந்தே நீலகிரி மாவட்டத்தில்  2018ம் ஆண்டு பிளாஸ்டிக் தடை அறிமுகம் செய்யப்பட்டது.

சுற்றுலா ஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில்  பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை சய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில்  19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தவும், தூக்கி எறியவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து, மே 2018 அன்று மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, மாவட்ட தகவல் இணையதளத்திலும் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிக்கவும், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும் மண்டல அலுவலர்களாக அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நீலகிரி வரும் பாதையில் உள்ள சோதனைச் சாவடியில் முன்னாள் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கல்லாறு மற்றும் குஞ்சப்பனை சோதனைச் சாவடிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஸ்டீல் கன்டெய்னர், காப்பர் பாட்டில்கள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களுக்கு மாற்றாக விற்பனை செய்ய சுயஉதவி குழுக்கள் கியோஸ்க் நிறுவப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்து வருகிறது.

ஊட்டியில் இருந்து குன்னூர் மற்றும் குன்னூர் முதல் ரயில் தண்டவாளங்கள் வரை நகராட்சிகள், பேரூராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள், வனத்துறை, ரயில்வே துறை, சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் வெகுஜன தூய்மைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நீலகிரி மலை ரயில் பாதையில் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை சுத்தம் செய்தல் மற்றும் அகற்றுதல் மற்றும் ரயில் பாதையில் இருந்து 3301.20 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டு, அது சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பிளாஸ்டிக் எதிர்ப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் செல்வதை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் மண்டல குழுக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சமீப காலமாக நீலகிரி மாவட்டத்தில்  தடை பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சியாளர்களும், மாவட்ட ஆட்சியரின் செயலற்ற தன்மையுமே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இநத் நிலையில், வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் தரப்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். நீலகிரியின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக மீண்டும் புழங்க தொடங்கி உள்ளதாக தெரிவித்ததுடன்,  மாவட்ட ஆட்சியர்  பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய்யான அறிக்கையை  தாக்கல் செய்துள்ளார் என கடுமையாக சாடியது. இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, குடிநீர் விநியோக மையங்கள் போன்றவை செயல்படவில்லை என்றும், பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர்  பிப்ரவரி 4ம் தேதி அன்று காணொலி மூலம் விசாரணைக்கு ஆ4ராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுபோல, கொடைக்கானல் விவகாரம் தொடர்பாக  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும்  காணொலி மூலம் ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.