சென்னை : சென்னை மாநகராட்சி மாமன்ற இன்றைய கூட்டத்தில், சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 2025 ஜனவரி மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (30.01.2025) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மாமன்ற கட்டிடமானது, 3 மாடி கொண்ட கட்டடமாக 94,760 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் ஆலோசனை கூடம், மன்ற கூடம், மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம், பொது மக்கள் காத்திருப்பு இடம், பத்திரிக்கையாளர் மாடம், பொது மக்கள் மாடம், உணவு அருந்தும் இடம் ஆகியவை இக்கட்டடத்தில் அமையவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.