சென்னை: சனாதன தர்மம் குறித்து பேசிய  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் 2ந்தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்  ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் உதயநிதி,  சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது, இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் உள்ளது என நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் உதயநிதி மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், “திராவிட சித்தாந்தத்தை ஒழிக்க” கோரி மாநாட்டை நடத்த அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்வர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்த செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கொச்சைப் படுத்தும் பேச்சுக்களை நடத்திய வர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அதற்கு எதிராக திராவிடக் கருத்தியலை ஒழிக்கக் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை தற்போது மனுதாரர் கோருவதாக தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்குவதற்கான கருத்துக்களை பரப்புவதற்கு நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும், அமைச்சர் களும் கலந்து கொண்டதோடு அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவல்துறையின் கடமையை அலட்சியப்படுத்து கிறது” என்று நீதிபதி  விமர்சித்துள்ளார்.

நீதிபதியின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, சனாதனம் தொடர்பாக தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அது சர்ச்சையானதும், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி,  ‘சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு’ என விளக்க மளித்தார்.

’இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா, குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா? நாட்டுக்குச் சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?’ என கேள்வி எழுப்பிய  நீதிபதி,  ’சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையை யும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ’நாட்டில் தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியாது எனவும், அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்’ எனவும் குறிப்பிட்டார். ’மத பழக்கவழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம்’ எனக் கூறிய நீதிபதி, ’அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பினார்.

‘தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ – மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்’ என்றார். ‘ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, ’கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.