மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் வந்த மோடி, மணிப்பூரில் யாரும் செய்யாததை தான் செய்துவிடவில்லை என்று தனது செயலுக்கு நியாயம் கற்பிப்பது போல முழங்கினார்.

மார்ச் 5, 1966 அன்று, மிசோரம் மக்கள் மீது விமானப்படை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மிசோரம் மக்கள் இந்திய குடிமக்கள் இல்லையா? அங்கு அப்பாவி மக்களை காங்கிரஸ் தாக்கியது. இன்றும், மார்ச் 5 அன்று, மிசோரம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த உண்மையை காங்கிரஸ் மறைக்கவில்லை, காயத்தை ஆற்ற முயற்சிக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த சம்பவம் தொடர்பான உண்மைப் பின்னணி என்ன?

1966, மார்ச் 5 ம் தேதி காலை 11:30 மணிக்கு மிசோரம் தலைநகர் அய்சால் மீது நான்கு இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசியது.

மிசோரம் எனப்படும் மிசோ ஹில்ஸ் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது 1960 ம் ஆண்டு அசாம் மாநில அரசு பணிகளுக்கு கட்டாயம் அசாம் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டமியற்றப்பட்டது.

இதனை எதிர்த்து போராடி வந்த மிசோ மக்கள் 1961 ம் ஆண்டு லால்துங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்.) என்ற அமைப்பை உருவாக்கி போராடி வந்தனர்.

1964 ம் ஆண்டு மாநில அரசு பணிகளில் அசாம் மொழி கட்டாய சட்டம் நிறைவேறியதை அடுத்து மிசோ மக்கள் அதிகமுள்ள இரண்டாவது பட்டாலியன் அசாம் ரைபிள் படை பிரிவில் இருந்து நீக்கப்பட்டது.

இதனையடுத்து மிசோ ஹில்ஸ் பகுதியில் வன்முறை வெடித்தது. படைப்பிரிவில் இருந்து நீக்கப்பட்ட மிசோ படையினர் எம்.என்.எப்.ப்புடன் இணைந்து மிசோ தேசிய ராணுவத்தை துவங்கினர்.

மிசோ ஹில்ஸ் பகுதியை ஒட்டிய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய எல்லையோர நாடுகளில் இருந்து மிசோ தேசிய ராணுவத்துக்கு தேவையான ஆயுத உதவிகள் கிடைத்ததோடு மியான்மர் மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் பதுங்கி இருந்து இந்திய பகுதி மீது தாக்குதல் நடத்தினர்.

லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எம்.என்.எப். தலைவர் லால்துங்கா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளையில் 1965 ம் ஆண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்த சமயம் பார்த்து, மிசோ தனி நாட்டை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று லால்துங்கா இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அறைகூவல் விடுத்தார்.

இதனையடுத்து 1966ம் ஆண்டு ஜனவரி 11 ம் தேதி இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி திடீர் மரணமடைந்த நிலையில் ஜனவரி 21 ம் தேதி இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ-வுக்கு கடிதம் எழுதிய லால்துங்கா

“ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சுதந்திர நிலையில் இருந்துள்ளோம். இங்கு அரசியல் விழிப்புணர்விலிருந்து பிறந்த தேசியவாதம் இப்போது முதிர்ச்சியடைந்துள்ளது. இப்போது மிசோ மக்களின் ஒரே ஆசை தமக்கென்று தனி நாடு வேண்டும் என்பதுதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு ஜனவரி 24 ம் தேதி பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா காந்தி பல்வேறு சவால்களை எதிர் கொண்டார் அதில் ஒன்று ‘ஆபரேஷன் ஜெரிச்சோ’.

இந்திய படையை மிசோரம் பகுதியில் இருந்து வெளியேற்ற 1966 பிப்ரவரி மாதம் மிசோ தீவிரவாத இயக்கம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் ஜெரிச்சோ’ நடவடிக்கை அய்சால் மற்றும் லுங்லாய் பகுதியில் உள்ள அசாம் ரைபிள் படை பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து அரசு கருவூலம் மற்றும் ராணுவ தளங்களை கைப்பற்றிய மிசோ தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த பகுதியாக மிசோ பகுதியை அறிவித்தனர்.

‘மிசோரம்: தி டாகர் பிரிகேட்’ (‘Mizoram: The Dagger Brigade’) என்ற புத்தகத்தில், எம்என்எஃப் தீவிரவாதிகளின் முக்கிய குழு, அஸ்ஸாம் ரைபிள்ஸ் நிலைப்பாட்டில், யாரும் வெளியேற முடியாதபடி, தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நிர்மல் நிபேதன் எழுதியுள்ளார். மறுபுறம் அரசு கருவூலத்தை கைப்பற்றி 18 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நள்ளிரவு நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் அசாம் ரைபிள் பிரிவு நிலைகுலைந்து போனதை அடுத்து அங்கிருந்த ஆயுத கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் 85 சிப்பாய்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே வடகிழக்கு எல்லையில் தீவிரவாத தாக்குதலை சந்தித்த பிரதமர் இந்திரா காந்தி கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

மார்ச் 5, 1966 அன்று நான்கு இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் மலைப் பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு தீவிரவாதிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற முடியாத படி தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதலைத் தொடர்ந்து 1967 ம் ஆண்டு மிசோ மலை வாழ் மக்களின் வாழ்வுக்காகவும் இந்தியாவின் எல்லையோர பாதுகாப்பு கருதியும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

இதனை நிறைவேற்றுவதில் அரசுக்கும் மிசோ அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததை அடுத்து மிசோ மக்களின் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் 1986 ஜூன் 30 அன்று, மத்திய அரசுக்கும் MNF க்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க மிசோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ராஜீவ் காந்தி அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு மிசோரம் தனி மாநிலமானது. அதே ஆண்டில் முதன்முறையாக மிசோரத்தில் தேர்தல் நடத்தப்பட்டு லால்தெங்கா மிசோரத்தின் முதல் முதலமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.