திருப்பதி பாலாஜியை தரிசிக்க வரும் பக்தர்களை அடையாளம் காண மார்ச் 1 முதல் முக அடையாளம் காணும் அமைப்பு அமல்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தங்குமிடம், சர்வ தரிசனம் தொடங்கி லட்டு பிரசாதம் வழங்கும் வரை அனைத்து இடங்களிலும் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புகார்கள் வருவதை அடுத்து இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தேவஸ்தானம் கவனம் செலுத்தி வருகிறது.

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு சுமார் 7000 தங்கும் அறைகள் உள்ளது, இவற்றில் 5000 அறைகள் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, 1000 அறைகள் வி.ஐ.பி. மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தவிர 1000 அறைகள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் 5000 முதல் 10000 பக்தர்கள் ரூ. 50 முதல் ரூ. 500 வரை கட்டணம் உள்ள இந்த தங்குமிடங்களை பயன்படுத்தி வருகின்றனர் இதற்கான பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ. 500 பெறப்படுகிறது.

சாதாரண பக்தர்கள் தவிர சிபாரிசு கடிதங்கள் மூலம் தங்குமிட வசதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனைத் தாண்டி திருமலையில் தங்குவதற்கு இடம் கிடைக்காத பக்தர்கள் தரகர்கள் மூலம் அதிக பணம்கொடுத்து தங்குமிடங்களைப் பெறுகின்றனர்.

மேலும், தரகர்கள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தங்குமிடங்களின் பாதுகாப்பு வைப்புத் தொகையை பக்தர்களின் பெயரைக் கூறி தரகர்கள் ஏமாற்றி வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் தங்குமிடங்களுக்கான கட்டணம் பெறப்படுவதுடன் வைப்புத் தொகையை திரும்பப்பெற பக்தர்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. மூலம் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், தரகர்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பதிவு செய்வதாலும் அல்லது பக்தர்களிடம் இருந்து ஓ.டி.பி.-யை பெற்றுக்கொள்வதாலும் இந்த வைப்புத் தொகையையும் அவர்களே வாங்கிக் கொள்வதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து தங்குமிடம், தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய முயற்சியாக பக்தர்களின் முக அடையாள அமைப்பு மூலம் மார்ச் 1 முதல் ஒரு வார காலத்திற்கு முயற்சி செய்ய உள்ளது.

இதன் மூலம் திருமலையில் நடைபெறும் முறைகேடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.