லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு  அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்ததைத்தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தின. இந்த நிலையில், சீனா உள்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதுடன் லாக்டவுன் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. இந்தியாவிலும் டெல்லி உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. தினசரி தொற்று பரவல்  ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த சூழலில், கடந்த சில தினங்களில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் 90 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் 214 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. உ.பி.யில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து,  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  உ.பி. அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டெல்லிக்கு அருகே உள்ள மாவட்டங்களான காஸியாபாத், கவுதம்புத் நகர், ஹாப்பூர், மீரட், புலந்த்சாகர், பாஹ்பத் ஆகிய மாவட்டங்களில் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தலைநகர் லக்னோவிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.